விருதுநகர் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும்

காயத்தால் அவதிப்படும் யானையின் சிகிச்சைக்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-02-28 18:51 GMT


காயத்தால் அவதிப்படும் யானையின் சிகிச்சைக்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

யானைக்கு சிகிச்சை

விருதுநகரில் காயம் அடைந்து அவதிப்படும் பெண் யானை லலிதாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கண்காணிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு, விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மேலும் கூறியிருப்பதாவது:-

யானைக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்பட்ட டாக்டர் கலைவாணனுக்கு யானைகள் நலவாழ்வு முகாமில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. அவர் தினமும் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். விருதுநகர் மாவட்ட நிர்வாகம் டாக்டர் கலைவாணனுக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மாவட்டம் நிர்வாகம் ஏற்பாடு

போதிய மருந்துகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய சத்தான உணவுகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். மாவட்ட கலெக்டர் இதற்கான உரிய ஏற்பாடுகளை சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், சேவை அமைப்புகள் மூலம் ஏற்பாடு செய்யலாம்.

மேலும் தற்போது யானையை கவனித்து வரும் பாகன், உதவி பாகன் ஆகியோரை மீண்டும் 4 மாதங்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் நியமனம் செய்து கொள்ள வேண்டும். இதற்கான செலவை மாவட்ட சட்ட பணிகள் குழு ஏற்க வேண்டும். யானை நிற்கும் இடத்தில் அருகே உள்ள பகுதிகளில் இருந்து ஒலிபெருக்கி மூலம் அதிக சத்தம் வரும் நிலையில் யானைக்கு பாதிப்பு ஏற்படுவதால் இதனை கட்டுப்படுத்த விருதுநகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தற்போது யானை நிறுத்தப்பட்டுள்ள இடம் மிகவும் வெப்பமாக உள்ள நிலையில் யானைக்கு குளிர்ச்சி தரும் வகையில் வேறு கொட்டகை அமைத்து அங்கு யானையை இட மாற்றம் செய்ய வேண்டும். யானை முழுமையாக குணமடைந்த பின்பு அதனை முகாமுக்கு அனுப்பி வைக்க வேண்டும். யானையின் உடல் நல முன்னேற்றம் குறித்து விருதுநகரில் உள்ள பிராணிகள் நல ஆர்வலர் சுனிதா ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்