காங்கயம் அருகே சிவன்மலை கிரிவலப்பாதையில் இருந்த விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
விநாயகர் சிலை
காங்கயம் அருகே புகழ்பெற்ற மலைக்கோவிலான சிவன்மலை முருகன் கோவில் உள்ளது. கோவிலின் அடிவார கிரிவலப்பாதையில் உச்சிப்பிள்ளையார் கோவில் உள்ளது.
இந்த கோயிலை ஒட்டிய பகுதியில் 6 மாதங்களுக்கு முன் புளியம்பட்டி பகுதியை சேர்ந்த பக்தர் ஒருவர் சூரிய விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது.
திறந்தவெளியில் பீடம் அமைக்கப்பட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டு இருந்தது. கிரிவலம் செல்லும் பக்தர்கள் இந்த விநாயகருக்கு விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தனர். தினசரி பூஜையும் செய்து வந்தார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பக்தர்கள் சிலர் கிரிவலம் வந்துள்ளனர். அப்போது விநாயகர் சிலை அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
திருட்டு
இதுகுறித்து காங்கயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காங்கயம் போலீசார் அப்பகுதிக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கடந்த சில நாட்களாக காங்கயம் பகுதியை சுற்றி பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் காங்கயம் அருகே சிவன்மலை கிரிவலப்பாதையில் விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.