விழுப்புரம் கோ-ஆப்டெக்சில் சிறப்பு விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் கோ-ஆப்டெக்சில் சிறப்பு விற்பனை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்;

Update: 2022-09-25 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் துணிகள் சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இதை கலெக்டர் மோகன், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறும்போது, கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், காஞ்சீபுரம், ஆரணி, திருபுவனம் போன்ற இடங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், திரைச்சீலைகள், கால்மிதியடிகள், நைட்டிகள், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏரளாமாக இங்கு வந்துள்ளன. இந்த ஆண்டு கோ- ஆப்டெக்சில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலூர் மண்டலத்திற்கு ரூ.14 கோடி விற்பனை குறியீடாகவும், அதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் விற்பனை நிலையத்திற்கு ரூ.1 கோடியே 20 லட்சமும், திண்டிவனம் விற்பனை நிலையத்திற்கு ரூ.40 லட்சமும் விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு தள்ளுபடி 30 சதவீத வசதியுடன் அரசு ஊழியர்களுக்கும் தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு. எனவே அனைத்துத்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கைத்தறி ஆடைகளை வாங்கி விழுப்புரம் மாவட்டத்துக்குட்பட்ட குறியீட்டு இலக்கை முழுவதுமாக எய்திடவும், நெசவாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையவும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ரமணி, விழுப்புரம் கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் கணேசன் மற்றும் விற்பனை நிலைய ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்