விழுப்புரம் பா.ஜ.க. அலுவலகத்தில் நிர்வாகிகள் போராட்டம்

மாவட்ட தலைவருக்கு எதிராக விழுப்புரம் பா.ஜ.க. அலுவலகத்தில் நிர்வாகிகள் போராட்டம்;

Update: 2023-07-10 18:45 GMT

விழுப்புரம்

பா.ஜ.க. விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் கட்சி நிர்வாகிகளை ஒருமையிலும், ஆபாசமாகவும் திட்டிய ஆடியோ வைரலானது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகத்தின் வளாகத்தில் அக்கட்சி நிர்வாகிகள் அமர்ந்து திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மாவட்ட தலைவர் கலிவரதனை கண்டித்தும், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

இதில் பொருளாதார பிரிவு ஒன்றிய தலைவர் சிவபாலன், நகர துணைத்தலைவர் யுவராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் வெங்கடேசன், நகர பொதுச்செயலாளர் சிவராஜ், மகளிர் அணி பொதுச்செயலாளர் வனிதாசுதா, பொருளாதார பிரிவு மாவட்ட துணைத்தலைவர் ஸ்ரீதேவி, மகளிர் அணி மாவட்ட துணைத்தலைவர் ரேகாபாய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இவர்கள் கூறுகையில், மாவட்ட தலைவர் கலிவரதன், கட்சி பணியை சரிவர செய்வதில்லை, பூத் கமிட்டிகளை சரிவர அமைக்கவில்லை. அவரது ஆதரவாளர்களுக்கு மட்டுமே பொறுப்பு வழங்கியுள்ளார். கட்சி நிர்வாகிகளை அவதூறாகவும், அவமரியாதையாகவும் பேசுகிறார். பெண் நிர்வாகிகளிடம் நாகரீகமற்ற முறையில் பேசுகிறார். எனவே அவரை கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மாநில தலைமை நீக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்