சிப்காட் கழிவுகளால் அவதிப்படும் கிராம மக்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சிப்காட் கழிவுகளால் அவதிப்படும் கிராம மக்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனா்.;
சிப்காட் கழிவுகளால் அவதிப்படும் பொதுமக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கழிவுகளால் பாதிப்பு
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிப்காட் தொழில்பேட்டை உள்ளது. இங்கு சுமார் 250 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. சிப்காட்டை ஒட்டி உள்ள கிராமங்கள் மற்றும் குளம் ஏரிகளில் தேங்கும் சிப்காட் கழிவுகளால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சிப்காட்டை அடுத்து உள்ள ஈங்கூர் கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் கூறியதாவது:-
எனக்கு திருமணமாகி 1995-ம் ஆண்டுக்கு முன்பு இங்கு வந்து விட்டேன். அப்போது ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தால் நல்ல தண்ணீர் கிடைத்தது. இப்போது 200 அடி ஆழத்திலேயே தண்ணீர் கிடைத்தாலும் வாயில்வைக்க முடியாத அளவு உப்பாக உள்ளது. குளித்தால் சரும பாதிப்பு ஏற்படுகிறது. புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சிப்காட்டு நிறுவனம்
இதுதொடர்பாக சிப்காட் வளாகத்தில் தொழில் நடத்தி வரும் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்.பி.ஏ. மகாலிங்கம், சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் பி.கே.என்.சந்திரசேகரன் ஆகியோர் கூறியதாவது:-
சிப்காட்டில் இப்போது தொழிற்சாலைகள் கழிவுகளை வெளியே விடுவது இல்லை. சிப்காட் பராமரிப்புக்காக சிப்காட் நிறுவனம் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் மாதம் தோறும் ரூ.2½ கோடி வசூல் செய்கிறது.
இந்த கட்டணத்தில் நிலத்தடி கழிவுகளை அகற்ற சிப்காட் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்
இதுகுறித்து தமிழகத்தின் முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கூறியதாவது:-
சிப்காட் வளாகத்தில் தொழிற்சாலைகள் கடந்த 1996-ம் ஆண்டுக்கு பிறகுதான் தொடங்கப்பட்டன. 2014-ம் ஆண்டு நான் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆனதும், சிப்காட் தொழில் அதிபர்களுடன் பேசி, கண்டிப்பாக அனைத்து ஆலைகளும் ஜீரோ டிஸ்சார்ஜ் எனப்படும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தச்செய்தேன். ஆலைகளை ஆய்வு செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை பெருந்துறையில் உருவாக்கினேன். தண்ணீரில் உப்பின் அளவை சோதனை செய்யும் ஆய்வகம் கொண்டு வரப்பட்டது. காற்றுமாசினை கண்டுபிடிக்க தனித்தனியாக அனைத்து நிறுவனங்களிலும் கருவிகள் பொருத்தப்பட்டு சென்னையில் இருந்தே கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டது. 9 தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. 2 ஆயிரம் மரக்கன்றுகள் சிப்காட் வளாகத்தில் நடப்பட்டு் பசுமை வளாகமாக மாற்றப்பட்டது.
ஆழ்குழாய் அமைக்க வேண்டும்
திடக்கழிவுகளை சிமெண்ட் உற்பத்திக்கு மூலப்பொருளாக பயன்படுத்தலாம் என்று கண்டறிந்து ஒரே நேரத்தில் 48 ஆயிரம் டன் திடக்கழிவை அப்புறப்படுத்தினோம். அதுபோல் ஆண்டுக்கு ஒரு முறை அனுமதி புதுப்பித்தல் என்ற நடைமுறையை பின்பற்றி வந்தோம். இவ்வாறு நான் பதவியில் இருந்த 1½ ஆண்டு, குறுகிய காலத்திலேயே பல திட்டங்கள் செயல்படுத்தினேன்.
தற்போது சிப்காட் வளாகம் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உள்ள பகுதிகளில் சிப்காட் நிறுவனம் ஆழ்குழாய் அமைத்து தண்ணீரை முழுமையாக உறிஞ்சி, சுத்திகரித்து அதை சிப்காட் தொழிற்சாலைகள் பயன்படுத்தச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது மட்டுமே மக்களையும் காப்பாற்றும், தொழிலையும் காப்பாற்றும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கூறினார்.