கிராம மக்கள் 'திடீர்' போராட்டம்
களக்காட்டில் கிராம மக்கள் ‘திடீர்’ போராட்டம்-மீன் வளர்ப்பு குத்தகையைஉள்ளூர் விவசாயிகளுக்கு வழங்க வலியுறுத்தல்
களக்காடு:
களக்காட்டில் உள்ள பறையன்குளத்தின் மூலம் அப்பகுதியில் 180 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. களக்காடு யூனியன் நிர்வாகத்திற்கு சொந்தமான இந்த குளத்தில் மீன் வளர்க்க ஆண்டுதோறும் ஏலமிடப்படுவது வழக்கம். இந்த குளத்தின் மூலம் பாசனம் பெறும் விவசாயிகளே மீன் வளர்க்க குத்தகைக்கு எடுப்பார்கள். மீன் வளர்ப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாயை சீரமைத்தல், வயல்களுக்கு செல்லும் கால்வாயை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தாண்டு மீன் வளர்க்க யூனியன் நிர்வாகத்தினர் அறிவிப்பு எதுவும் இன்றி வெளியூர் நபர்களுக்கு குத்தகை வழங்கியதாக கூறப்படுகிறது. எனவே வெளியூர் நபர்களுக்கு வழங்கிய மீன் வளர்ப்பு குத்தகையை ரத்து செய்து விட்டு, மீண்டும் பறையன்குளத்தின் மூலம் பாசனம் பெறும் விவசாயிகளுக்கே மீன் வளர்ப்பு குத்தகையை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி நேற்று கிராம மக்கள் பறையன்குளத்தில் திரண்டு திடீெரன போராட்டம் நடத்தினர். இதுபற்றி யூனியன் நிர்வாகத்தினர் கூறுகையில், "பறையன்குளத்தை ஏலம் எடுக்க ஒருவர் மட்டுமே பணம் செலுத்தினார். வேறு எவரும் பணம் செலுத்தவில்லை. அதனால் தான் அவருக்கு குத்தகை வழங்கப்பட்டது" என்றனர்.