குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டம்
அய்யலூர் அருகே, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கிராம மக்கள் போராட்டம்
அய்யலூர் அருகே உள்ள எஸ்.பூசாரிபட்டியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சுக்காம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில், காலை உணவு திட்டத்துக்கு 3 ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, பூசாரிபட்டி கிராம மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை வட்டார கல்வி அலுவலர் நல்லுச்சாமி, சம்பவ இடத்துக்கு விரைந்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஊழியர் நியமனம்
அப்போது கிராம மக்கள், காலை உணவு திட்டத்துக்கு நியமிக்கப்பட்ட 3 பேரில் 2 பேர் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். 60 சதவீத மாணவர்கள் படிக்கிற எங்கள் பகுதியில் இருந்து ஒரு ஊழியர் கூட தேர்ந்தெடுக்கவில்லை. எனவே எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவரை ஊழியராக நியமிக்க வேண்டும். ஊழியர்கள் நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதனையடுத்து பூசாரிபட்டியை சேர்ந்த தகுதி வாய்ந்த ஒருவரை காலை உணவு திட்டத்துக்கு பள்ளியில் ஊழியராக நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக வட்டார கல்வி அலுவலர் உறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக, சுக்காம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.