உயிரை பணையம் வைத்து ஆற்றை கடந்து செல்லும் கிராம மக்கள்

மணிமுக்தாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரை பணையம் வைத்து ஆற்றை பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். இதை தவிர்க்க மே.மாத்தூரில் மேம்பால் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2022-09-01 17:21 GMT

ராமநத்தம்,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மே.மாத்தூர் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள 70-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் நல்லூர் மற்றும் வேப்பூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். மே.மாத்தூர் கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. இதனால் பஸ் வசதி செய்து கொடுக்கப்படவில்லை.

இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் அங்குள்ள மணிமுக்தாற்றை கடந்து மெயின்ரோட்டுக்கு சென்று அங்கிருந்து தங்களது தேவைகளை நிறைவேற்றி கொள்ள வெளியூர் சென்று வருகின்றனர்.

ஆனால் மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது மே.மாத்தூர் கிராம மக்கள் ஆற்றை கடக்கமுடியாமல் கிராமத்துக்குள்ளேயே முடங்கிகிடந்து வருகின்றனர். இதனால் அந்த நேரங்களில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று கல்வி கற்க முடியாத நிலை ஏற்படுகிறது.

மேலும் தொழிலாளிகள், விவசாயிகள் உள்ளிட்டவர்களின் பணிகளும் பாதிக்கப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

மேம்பாலம்

இது குறித்து பல முறை கோரிக்கை வைத்தும் மணிமுக்தாற்றில் மேம்பாலம் அமைத்து மே.மாத்தூர் கிராமத்துக்கு பஸ் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையினால் மணிமுக்தாற்றில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் பள்ளி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தங்களின் உயிரை பணையம் வைத்து ஆற்றுக்குள் இறங்கி சென்று வருகின்றனர். இந்த நிலைமாற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்