ஓமலூர் அருகே குவாரி பாதை விவகாரம்: சாலையில் அமர்ந்து கிராம மக்கள் போராட்டம்-அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

ஓமலூர் அருகே குவாரி பாதை விவகாரம் தொடர்பாக சாலையில் அமர்ந்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

Update: 2023-01-11 22:45 GMT

ஓமலூர்:

பல்வேறு போராட்டங்கள்

ஓமலூரை அடுத்த நடுப்பட்டி ஊராட்சி காக்காயன்காடு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊருக்கு ேமலே உள்ள பகுதியில் 3 ஜல்லி குவாரிகள் உள்ளன. இந்த குவாரிக்கு வந்து செல்லும் லாரிகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி அந்த பகுதி மக்கள் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடந்தன.

இதுதொடர்பாக தாசில்தார் நடத்திய பேச்சுவார்த்தையின் போது கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கோர்ட்டு உத்தரவு

இதற்கிடையே குவாரிக்கு லாரிகள் செல்லும் பாதையில் அந்த கிராம மக்கள் தென்னங்கன்றுகளை நட்டு வைத்ததுடன், சாலையை சேதப்படுத்தியதாக கூறி குவாரி உரிமையாளர்கள் தரப்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டு உத்தரவின் பேரில் தென்னங்கன்றுகளை அகற்றுவதுடன், சேதப்படுத்திய சாலையை சரிசெய்யவும் கோர்ட்டு உத்தரவிட்டதாக தெரிகிறது.

உடனே ஒன்றிய ஆணையாளர் ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் வருவாய்த்துறையினர் அந்த பகுதிகளை பார்வையிட்டனர். இதனை அறிந்த கிராம மக்கள் அந்த பகுதியில் திரண்டனர்.

தர்ணா போராட்டம்

உடனே அவர்கள் சாலையை சீரமைக்க எதிர்ப்பு தெரிவித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது ரேஷன்கார்டுகளை ஒப்படைக்க போவதாக கூறினர். மேலும் தரையில் துண்டை விரித்து அதில் ரேஷன்கார்டுகளை போட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் மேட்டூர் சப்-கலெக்டர் தணிகாசலம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிலமணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்