சீரான குடிநீர் வழங்க கோரி அரசு பஸ்சை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம் - அதிகாரிகள் சமரசம்

கும்மிடிப்பூண்டி அருகே சீரான குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-07 06:34 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஓபசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது குழிநாவல் கிராமம். இங்கு குழாய்களில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த சில நாட்களாக தெருக்களுக்கு குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்தநிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று அந்த வழியாக கள்ளூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்சை காலி குடங்களோடு சிறை பிடித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த கும்மிடிப்பூண்டி தாசில்தார் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், நடராஜன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குழாய்களில் ஏற்பட்டு உள்ள பழுது சீரமைக்கப்பட்டு குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர்.

மேலும், தற்காலிகமாக குடிநீரை டேங்கர் வாகனபொதுமக்களுக்கு வழங்கிடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து கிராம மக்கள் அனைவரும் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்