வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்

கூடலூர் அருகே விளைநிலத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-26 19:00 GMT

கூடலூர்

கூடலூர் அருகே விளைநிலத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்காணிப்பு கோபுரம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

இதில் வனத்துறை சார்பில், காந்திநகர் கிராமத்தில் கோபுரம் அமைத்து யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டத்தை இரவு, பகலாக வனத்துறை ஊழியர்கள் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் வனப்பகுதியை ஒட்டி கண்காணிப்பு கோபுரம் அமைப்பதற்கான பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காணப்படவில்லை.

கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

இந்தநிலையில் நேற்று முன்தினம் கண்காணிப்பு கோபுரம் அமைப்பதற்காக நிலத்தை சமப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதை அறிந்த கிராம மக்கள் பணியை தடுத்து நிறுத்தினர். அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒருவர் விவசாயம் செய்து வரும் நிலத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பதாக வனத்துறை மீது புகார் தெரிவித்தனர்.

மேலும் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தாசில்தார் ராஜேஸ்வரி மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட வில்லை.

இந்தநிலையில் நேற்று விளைநிலத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்தி நகரில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடிகளை ஏற்றி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த நியூ ஹோப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாலையில் பெரும்பாலான வீடுகளில் கருப்புக்கொடிகள் அகற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்