திருமங்கலம் அருகே 4 பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
திருமங்கலம் அருகே 4 அரசு பஸ்களை கிராம மக்கள் சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
.
அரசு பஸ்கள்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கொக்குளம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் மதுரை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அரசு பஸ்களில் சென்று வருகின்றனர். இதே போல் அப்பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் தினமும் பஸ்களை பயன்படுத்தி பள்ளிக்கு சென்று வருகின்றனர். மதுரையில் இருந்து தினமும் காலை, மதியம், மாலை நேரத்தில் கொக்குளம் கிராமத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையத்துக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் சில நாட்களாக காரியாபட்டி பணிமனைக்கு உட்பட்ட பஸ், டி.கொக்குளம் கிராமத்தில் இருந்து மதுரை அண்ணா பஸ் நிலையத்திற்கு சென்று வருகிறது. இந்த அரசு பஸ் முறையாக இயக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் தினமும் காலை நேரத்தில் வரக்கூடிய பஸ் உரிய நேரத்திற்கு வராமல் தொடர்ந்து காலதாமதமாக வந்து கொண்டிருந்தது.
சிறைபிடிப்பு
இதனால் வேலைக்கு செல்கிறவர்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் போக்குவரத்து கழக அலுவலகத்தில் முறையிட்டனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலை தங்கள் ஊருக்கு வந்த திருமால், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் இருந்து பெரியார் நிலையம் செல்லும் பஸ்சை கிராம மக்கள் சிறை பிடித்தனர். இதைதொடர்ந்து அடுத்தடுத்து திருமங்கலம் பகுதியில் இருந்து வந்த 2 பஸ்களும் சிறைபிடிக்கப்பட்டன. இதனால் மதுரை-திருமங்கலம் செல்லும் அரசு பஸ்கள் என மொத்தம் 4 பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தினமும் உரிய நேரத்திற்கு பஸ் விடப்படும் என கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.