குடியிருப்பு திட்டத்தின்கீழ் ஊராம்பட்டியில் வீடுகட்ட கிராம மக்கள் எதிர்ப்பு

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ஊராம்பட்டி பகுதியில் வேறு பஞ்சாயத்தை சேர்ந்தவர்களுக்கு வீடு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தாசில்தார் விசாரணை நடத்தினார்.;

Update:2022-07-14 01:09 IST

சிவகாசி, 

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ஊராம்பட்டி பகுதியில் வேறு பஞ்சாயத்தை சேர்ந்தவர்களுக்கு வீடு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தாசில்தார் விசாரணை நடத்தினார்.

குடியிருப்பு திட்டம்

மத்திய அரசின் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு வீடுகட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2015-2016-ம் ஆண்டு ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது. சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் இதன்படி 2021- 2022-ம் நிதி ஆண்டில் 1,557 பேருக்கு இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டி கொடுக்க மத்திய அரசு அதற்கான உத்தரவை வழங்கியது.

இதில் பலர் தங்களது சொந்த இடத்தில் வீடு கட்டி வருகிறார்கள். 483 பயனாளிகள் உரிய தகுதி இருந்தும் அவர்களுக்கு போதிய இட வசதி இல்லாமல் இருப்பதால் வீடு கட்ட முடியவில்லை என்று தகவல் தெரிவித்தனர்.

நிலம் ஒதுக்கீடு

அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட ஊராம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பர்மாகாலனியில் 106 பேருக்கு ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா 2¼ சென்ட் நிலம் ஒதுக்கி கொடுத்தது. இதில் தற்போது 10-க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை கட்டி வருகிறார்கள்.

இந்த திட்டத்தில் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட ஆனையூர், விஸ்வநத்தம், மாரனேரி, விளாம்பட்டி, பூலாவூரணி, சித்துராஜபுரம், வேண்டு ராயபுரம், நடையனேரி, பள்ளப்பட்டி, எரிச்சநத்தம் ஆகிய 10 பஞ்சாயத்துக்களை சேர்ந்த பயனாளிகள் உள்ளனர். இந்த நிலையில் ஊராம்பட்டி பஞ்சாயத்து பகுதியில் வசித்து வரும் நபர்களை தவிர மற்ற பஞ்சாயத்துக்களில் வசித்து வரும் நபர்களுக்கு பர்மாகாலனியில் இருக்கும் மேய்ச்சல் புறம்போக்கு இடத்தை ஒதுக்கீடு செய்தது தவறு என அதிகாரிகளிடம் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முற்றுகை போராட்டம்

ஆனாலும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று காலை 9 மணிக்கு ஊராம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சுமார் 150 பேர் பர்மா காலனி பகுதிக்கு வந்து அங்கு வீடுகள் கட்டுமான பணிகளை நிறுத்த வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து சிவகாசி தாசில்தார் லோகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் கண்ணன், காளிராஜ், சக்திதாசன் ஆகியோருக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு கூடியிருந்த கிராம மக்களிடம் தாசில்தார் லோகநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். 6 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் கட்டுமான பணிகளை தொடர வேண்டாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கிராம மக்களின் திடீர் முற்றுகையால் பர்மாகாலனியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்