குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் மறியல்
கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
குடிநீர் குழாய்கள் சேதம்
கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த கோட்டைக்காடு கிராமம் உள்ளது. இங்குள்ள வடக்கு தெருவில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இதன்மூலம் அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வடக்கு தெருவிற்கு குடிநீர் செல்லும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் பதிக்கப்பட்டிருந்த குழாய்கள் 200 மீட்டர் நீளத்திற்கு நொறுங்கி சேதமாகி இருந்தன. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் தடைப்பட்டது.
சாலை மறியல்
இதையடுத்து, குழாய்களை சீரமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் கோட்டைக்காட்டில் கறம்பக்குடி- ஆலங்குடி சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சேதமடைந்த குழாய்களை புதுப்பித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.