குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் மறியல்
கருவேப்பிலங்குறிச்சியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம்
குடிநீர் வினியோகம் பாதிப்பு
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள 1-வது வார்டில் விருத்தாசலம்- ஜெயங்கொண்டம் சாலை யை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டபோது குடிநீர் குழாய் உடைந்து இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. குடிநீருக்காக அப்பகுதி மக்கள் அக்கம்பக்கத்து கிராமங்களுக்கு சென்றும், அருகில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்றும் மிகுந்த சிரமத்துடன் தண்ணீர் பிடித்து வந்தனர்.
சாலை மறியல்
எனவே இது குறித்து கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் விருத்தாசலம்-ஜெயங்கொண்டம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.