சாதிச்சான்றிதழ் கேட்டு கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

திண்டுக்கல் கலெக்டரிடம் சாதிச் சான்றிதழ் கேட்டு கிராம மக்கள் மனு கொடுத்தனர்.;

Update: 2023-02-20 19:00 GMT

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இந்த நிலையில் வேடசந்தூர் தாலுகா வாலிசெட்டிப்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் நேற்று தங்களின் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், எங்கள் கிராம மக்களுக்கு கடந்த 2011, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் சாதிச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அதன் பிறகு விண்ணப்பித்த யாருக்கும் சாதிச்சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் அரசின் எந்த சலுகைகளையும் பெற முடியாமல் தவிக்கிறோம். எனவே எங்களுக்கு சாதி சான்றிதழ்களை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். இந்த மனு உள்பட மொத்தம் 280 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகள் ஆகியோருக்கு இலவச வீட்டுமனை பட்டா உள்பட மொத்தம் 33 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட வண்ணம் தீட்டுதல், கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்