தனியார் மதுபான பார் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
நத்தம் அருகே தனியார் மதுபான பார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.;
நத்தம் அருகே வேலம்பட்டி ஊராட்சியில் நேருநகர், செல்லம்புதூர் கிராமங்கள் உள்ளன. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தனியார் மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்லக்கூடிய செந்துறை சாலையோரத்தில் தனியார் மதுபான பார் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வேலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையில் ஊர்வலமாக நத்தம் தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள், தாசில்தார் ராமையாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதேபோல் நத்தம் போலீஸ் நிலையத்துக்கு சென்ற கிராம மக்கள், சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியனிடமும் மனு கொடுத்தனர். அந்த மனுவில், தனியார் பார் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.