குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
கோவில்பட்டி குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.;
கோவில்பட்டி:
கோவில்பட்டி குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு இலுப்பையூரணி பஞ்சாயத்து தலைவி செல்வி சந்தனம் தலைமையில் பஞ்சாயத்து உறுப்பினர்கள், கிராம மக்கள், தி.மு.க. விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் சந்தனம் ஆகியோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இலுப்பையூரணி பஞ்சாயத்து பகுதிகளில் சீவலப்பேரி கூட்டு குடிநீர் வாரம் ஒரு முறை வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் சீராக வினியோகம் செய்யப் படுவதில்லை. மாதந்தோறும் குடிநீர் வடிகால் வாரியம் குடிநீர் கட்டணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கிறார்கள். கடந்த மாதம் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நிலுவைத் தொகை ரூ.4 லட்சத்து 31 ஆயிரத்து 775 செலுத்தியுள்ளோம். மாதம் ஒருமுறை கூட குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கோஷமிட்டனர்.
தகவல் அறிந்ததும் குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் மெர்சி வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். குழாய் அமைக்கும் பணிகள் முடித்து வரும் 3-ந்தேதி முதல் சீராக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.