பர்கூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

பர்கூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2023-08-23 20:41 GMT

அந்தியூர்

பர்கூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தாமரைகரை

அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதி அருகே தாமரைகரையில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக பர்கூர் ஊராட்சி சார்பில் ஆங்காங்கே பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி வைத்து, அதில் ஆழ்குழாய் தண்ணீரை நிரப்பி வந்தனர். கிராமமக்கள் தொட்டியில் உள்ள தண்ணீரை தங்களது தேவைகளுக்காக பயன்படுத்தினார்கள்.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக தாமரைகரையில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தண்ணீரின்றி கிராமமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

சாலை மறியல்

இதன்காரணமாக நேற்று காலை 8 மணி அளவில் தாமரைகரை கிராமமக்கள் ஒன்று திரண்டு காலிக்குடங்களுடன் அந்தியூர் -மைசூரு செல்லும் சாலையில் உட்கார்ந்து, திடீரென மறியலில் ஈடுபட்டனர். அதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும், பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பர்கூர் ஊராட்சி செயலாளர் குமார் ஆகியோர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

பேச்சுவார்த்தையின்போது கிராம மக்கள், ஒரு வாரமாக எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. வேறு வழியின்றி வனப்பகுதிக்குள் ஆபத்தையும் மீறி சென்று குட்டைகளில் உள்ள தண்ணீரை கொண்டு வருகிறோம். இதனால் கூலி வேலைக்கும் செல்ல முடியவில்லை. குடிநீர் இல்லை என்றால் நாங்கள் என்ன செய்வது என்று கேட்டனர்.

அதற்கு ஊராட்சி செயலாளர் குமார், மழை பெய்யாததால் சில இடங்களில் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டது. மேலும் லாரி மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படும் என்றார். அதை கிராம மக்கள் ஏற்றுக்கொண்டு அங்கு இருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்