குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

சாத்தப்புத்துார் கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராமமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்;

Update: 2022-06-25 16:47 GMT

ரிஷிவந்தியம்

குடிநீர் தொட்டி பழுது

ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட சாத்த புத்தூர் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், 5-க்கும் மேற்பட்ட மினி குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் ஏரிக்கரையை ஒட்டியுள்ள மினி குடிநீர் தொட்டி பழுதடைந்ததால், கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் காலி குடங்களை தூக்கிக்கொண்டு அக்கம்பக்கத்து கிராமங்களுக்கும், விவசாய கிணறுகளுக்கும் சென்று மிகவும் சிரமப்பட்டு குடிநீரை பிடித்து வந்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பழுதடைந்த மினி குடிநீர் தொட்டியை சரிசெய்து குடிநீர் வழங்கக்கோரி நேற்று காலை 6.30 மணியளவில் பாவந்தூர்-சித்தால் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காலி குடங்களை சாலையின் குறுக்கே அடுக்கி அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தியாகதுருகம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்