ராமநத்தம் அருகேமுறையாக மின்சாரம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

ராமநத்தம் அருகே முறையாக மின்சாரம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-05 20:13 GMT


ராமநத்தம்,

ராமநத்தம் அடுத்த கீழக்கல்பூண்டி, மேலக்கல்பூண்டி, வடகராம்பூண்டி, கண்டமத்தான், கொரக்கவாடி, லட்சுமணாபுரம், குடிக்காடு ஆகிய கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒருவாரமாக குறைந்த மின்அழுத்தத்தில் மின்சாரம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் வீடுகளில் மின்விசிறி கூட இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் மக்காச்சோளம், மரவள்ளி கிழங்கு, நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. இதுகுறித்து கீழக்கல்பூண்டி உதவி மின் அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கீழக்கல்பூண்டியில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முறையாக மின் வினியோகம் செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த தொழுதூர் வருவாய் ஆய்வாளர் செல்வராணி, கிராம நிர்வாக அலுவலர் சத்தியராஜ், ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், பொட்டா மற்றும் போலீசார் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பும் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்