சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்ககோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

ஊத்துக்கோட்டை அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2023-03-23 08:45 GMT

உலக தண்ணீர் தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் கிராமத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் தில்லை குமார் தலைமை தாங்கினார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் திரண்டு வந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்தபோது, பேரிட்டிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட உப்பரபாளையம், வடதில்லை, பேரிட்டிவாக்கம் ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் சுமார் 3 ஆயிரம் பேருக்கு 4 பகுதிகளில் அமைக்கப்பட்ட குடிநீர் மேல்நிலை தொட்டிகளில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

இந்த 3 கிராமங்களிலும் நிலத்தடி நீரில் அயோடின் (உப்பு) சதவீதம் அதிகமாக உள்ளது. இதனால் எந்தவித சமையல் செய்தாலும் நிறம் மாறி விடுகிறது. இந்த உணவை உட்கொள்ளும் பலர் உடல் உபாதைகளுக்கு உட்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்க கோரி முறையிட்டும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தனர். இந்த முற்றுகை போராட்டத்தால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் தில்லை குமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து கிராம சபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். அதன்படி உப்பரபாளையம், பேரிட்டிவாக்கம், வடதில்லை ஆகிய பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்க வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பேரிட்டிவாக்கம் கிராமத்தில் உள்ள பழமை அடைந்த அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்