சாராயம் விற்பவர்கள், துணை போகும் போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிகள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டை கிராம மக்கள் முற்றுகைகலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
சாராயம் விற்பவர்கள், துணை போகும் போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கிராம மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரை நேரில் சந்தித்து சட்டம்- ஒழுங்கு சம்பந்தமான ஆலோசனையில் ஈடுபடுவார். அதன்படி, நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமாரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து தனது காரில் ஏற சென்றார்.
முற்றுகை
அப்போது கள்ளக்குறிச்சி அருகே விளம்பார் கிராமத்தை சேர்ந்த தி.மு.க மற்றும் பா.ஜ.க., அ.தி.மு.க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்தனர். அவர்கள், போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் காரில் ஏறாதவாறு அவரை சுற்றிலும் சூழ்ந்து நின்று முற்றுகையிட்டனர். இதை சற்றும் எதிர்பாராத போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், அவர்களிடம் எதற்காக திரண்டு வந்துள்ளீர்கள் என்று கேட்டார்.
சாராயம் விற்பனை
அப்போது கிராம மக்கள் கூறுகையில், விளம்பார் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தங்களது வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகிறார்கள்.
இவர்களிடம் சாராயம் வாங்குவதற்காக தச்சூர், பொற்படாக்குறிச்சி, காட்டனந்தல், லட்சியம், மலைக்கோட்டாலம், தென்கீரனூர், வாணவரெட்டி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சாராய பிரியர்கள் சாராயம் குடித்து விட்டு பிரச்சினையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் எங்கள் கிராமத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதுடன், பெண்கள், மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. சாராயம் குடித்தவர்களில் பலர் இதுவரைக்கும் உயிரிழந்தும் இருக்கிறார்கள்.
துணைபோகும் போலீஸ்
சாராயம் விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தால் அந்த போலீசார், சாராய வியாபாரிகளுக்கு தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் போலீசுக்கு யார் தகவல் தெரிவிக்கிறார்கள் என்று அடையாளம் கண்டு, அடியாட்களை வைத்து மிரட்டியும், பாலியல் தொல்லை தருவதாக வழக்கு தொடர்வேன் என்று மிரட்டியும் வருகின்றனர்.
எனவே சாராய வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று அவர்களுக்கு துணைபோகும் வகையில் செயல்பட்ட போலீசாரின் விவரங்களை அறிய, அவர்களது செல்போனில் பேசிய விவரங்களை சேகரித்து சம்மந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
வாக்குவாதம்
பேச்சுவார்த்தையின் போது போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, சாராய வியாபாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்வதாக போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உறுதியளித்தார். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.
பின்னர் கலெக்டர் ஷ்ரவன்குமாரை நேரில் சந்தித்து, சாராய வியாபரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.