எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.;
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே கண்மாயில் சரள் அள்ளுவதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தாலுகா அலுவலகம் முற்றுகை
எட்டயபுரம் அருகே உள்ள கீழக்கரந்தை கிராமத்தை சேர்ந்த மக்கள் கிராம கமிட்டி தலைவர் திருமேனி தலைமையில் ஏராளமானோர் நேற்று தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, கீழக்கரந்தை கண்மாய் வரத்துக்கால்வாயில் சரள் மண் அள்ளுவதை தடை செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. பின்னர் எட்டயபுரம் தாசில்தார் கிருஷ்ணகுமாரியிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.
கோரிக்கை
அந்த மனுவில், எட்டயபுரம் தாலுகா கீழக்கரந்தை கிராமத்தில் பொது கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு வெம்பூர், அழகாபுரி, மெட்டில்பட்டி ஆகிய கிராமப்பகுதிகளில் இருந்து பெய்யும் மழைத்தண்ணீர், வரத்துகால்வாய் வழியாக வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கீழக்கரந்தை கிராம கண்மாய்க்கு வரும் வரத்துக்கால்வாய் தனியார் நிறுவனம் சரள் மண் அள்ளி வருகிறது. இதனால், மழைக்காலங்களில் எங்கள் கண்மாய் தண்ணீர் வரத்து தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயம், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, வரத்துக்கால்வாயில் இருந்து சரள் மண் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும், என தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதை தொடர்ந்து கிராம மக்கள் முற்றுகையை கலைந்து சென்றனர்.