கடையம் அருகே தண்ணீர் கேட்டு கிராம மக்கள் போராட்டம்

கடையம் அருகே தண்ணீர் கேட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-28 18:45 GMT

கடையம்:

கடையம் யூனியனுக்கு உட்பட்டது ஐந்தாம்கட்டளை பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்திற்கு உட்பட்ட சொக்கநாதன்பட்டி கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியும், அருகில் உள்ள கட்டளையூரில் கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் வீட்டு உபயோகத்துக்கான தண்ணீர் வினியோகம் செய்யும் வகையில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியும் அமைந்துள்ளது. அதன்மூலம் இரு கிராமங்களுக்கும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கட்டளையூரில் இருந்து வீட்டு உபயோகத்துக்கான தண்ணீரை சொக்கநாதன்பட்டிக்கு வழங்க அப்பகுதி மக்கள் மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சொக்கநாதன்பட்டி கிராமத்தில் இருந்து தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறியும், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கட்டளையூர் கிராம மக்கள் கடையம் யூனியன் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியை முற்றுகையிட்டனர். அப்போது தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

அதன்படி நேற்று மாலை யூனியன் அதிகாரி தண்ணீர் திறந்து விடுவதற்காக சொக்கநாதன்பட்டி கிராமத்திற்கு சென்றார். அப்போது கிராம மக்கள், கட்டளையூரில் இருந்து தங்கள் பகுதிக்கு ஆழ்குழாய் கிணறு தண்ணீர் தராத வரை எங்கள் கிராமத்தில் இருந்து கட்டளையூருக்கு தண்ணீர் வழங்க மாட்டோம் என்று கூறி குடிநீர் தொட்டி வளாகத்தில் காலிக்குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருகிற 4-ந்தேதி அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்