நிதி நிறுவனம் நடத்தி மகன் ஏமாற்றியதால் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு

திருத்தணி அருகே நிதி நிறுவனம் நடத்தி மகன் ஏமாற்றியதால் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2022-09-07 09:24 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி ஊராட்சிக்கு உட்பட்ட சந்தன கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் கலைமாமணி. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிதி நிறுவனத்தை தொடங்கி பொதுமக்களிடம் பணம் முதலீடு செய்பவர்களுக்கு மாதாமாதம் அதிக வட்டியுடன் பணத்தை தங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கிறோம் என்று அறிவித்தார்.

மேலும், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏஜெண்டுகளை நியமித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்தனர். இதை நம்பி திருத்தணி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் இந்த நிதி நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர்.

சில மாதங்களுக்கு முன் அந்த நிதி நிறுவன கிளைகளை மூடி விட்டு நிறுவன தலைவர் கலைமாமனி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கலைமாமணியின் தாய் சரசம்மா (வயது 70). நேற்று காலை உடல்நிலை பாதிக்கப்பட்டும், வயது முதிர்வின் காரணமாக இறந்தார். தாய் இறப்புக்கும் கலைமாமணி வரவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை சரசாவின் இறுதி சடங்கு செய்வதற்கு அவரது உறவினர்கள் தயாரானார்கள்.

இதை அறிந்ததும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த சிலர் கலைமாமணி இங்கே வந்ததால்தான் சரசாவின் உடலை அடக்கம் செய்ய அனுமதிப்போம் என்று தகராறில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு, பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுங்கள். சரசாவின் இறுதி சடங்குக்கு நீங்கள் தடைவிதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தினார். இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்