வடமதுரை அருகே தனியார் தொழிற்சாலையை கிராம மக்கள் முற்றுகை
வடமதுரை அருகே தனியார் தொழிற்சாலையை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
வடமதுரையை அடுத்த தென்னம்பட்டியில், முள்ளாம்பட்டி செல்லும் சாலையில் ஆண்டிப்பட்டி பிரிவு அருகே டயர்களை எரித்து ஆயில் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு டயர்களை எரிப்பதால் கிளம்பும் கரும்புகையால் ஆண்டிப்பட்டி கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் காற்று மாசு காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டயர் எரிக்கும் தொழிற்சாலை முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது ஜூலை மாதம் முதல் டயர் எரிப்பதை நிறுத்தி விடுவதாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர். ஆனால் தொழிற்சாலை தொடர்ந்து இயங்கி வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று அந்த தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொழிற்சாலை நிர்வாக அதிகாரிகளிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையாக புகார் கொடுத்து பிரச்சினைக்கு தீர்வு காண கிராம மக்களுக்கு அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.