விஷம் குடித்து ஊர் நாட்டாண்மை தற்கொலை

வாலிபர் தாக்கியதால் வேதனை அடைந்த ஊர் நாட்டாண்மை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-06-18 19:33 GMT

திரவுபதி அம்மன் கோவில்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கீழநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 50). விவசாயியான இவர் கீழநத்தம் கிராமத்தின் நாட்டாண்மையாக இருந்து வந்தார். கடந்த மாதம் கீழநத்தம் கிராமத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது. அதில் வரவு-செலவு கணக்கு தொடர்பாக நேற்று முன்தினம் திரவுபதி அம்மன் கோவிலில் நிர்வாகிகள் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த கீழத்தெருவை சேர்ந்த எழிலரசன் (35) என்பவர் ஊர் நாட்டாண்மை கலியபெருமாளிடம் தீமிதி திருவிழாவில் செலவு செய்யப்பட்ட கணக்கு வழக்கு குறித்து கேட்டதாக கூறப்படுகிறது.

3 பேர் மீது வழக்கு

இதில், கலியபெருமாளுக்கும், எழிலரசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த எழிலரசன், கலியபெருமாளை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த கலியபெருமாள் தனது வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கலியபெருமாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கலியபெருமாளின் மனைவி சாந்தா கொடுத்த புகாரின் பேரில் எழிலரசன், இதற்கு தூண்டுதலாக இருந்த கருப்பையன், கலைச்செல்வன் ஆகியோர் மீது விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்