கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் அனைத்து கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசியில் அனைத்து கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்ட அனைத்து கிராம பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் குறிப்பாக அனைத்து பெண் தலைவர்களுக்கும் உரிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2-க்கான திட்ட பணிகளுக்கு மாவட்ட முகமை மூலமாக நடைபெறும் மின்னணு டென்டரை ரத்து செய்து அந்தந்த ஊராட்சியிலேயே டென்டர் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊர்வலமாக சென்றனர்
இதில் மாவட்ட அனைத்து கிராம பஞ்சாயத்துகளின் ஒருங்கிணைப்பாளரும், கடையம் யூனியன் 23 பஞ்சாயத்துக்களின் கூட்டமைப்பு தலைவருமான டி.கே. பாண்டியன் தலைமையில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். சுமார் 1 மணி நேர ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அனைவரும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.
ஆனால் ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி அளிக்காததால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது பஞ்சாயத்து தலைவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டரிடம் மனு
பின்னர் போலீசார், 10 பேர் மட்டும் செல்ல அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து 10 பேர் கலெக்டர் ஆகாஷை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.