கிராம நிர்வாக அலுவலர்கள் 3-வதுநாள் காத்திருப்பு போராட்டம்

தக்கலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் 3-வதுநாள் காத்திருப்பு போராட்டம்;

Update: 2023-02-14 18:45 GMT

தக்கலை, 

கிள்ளியூர் தாலுகா கீழ் மிடாலம் 'பி' கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த ராஜேஷ் என்பவர் அதே தாலுகாவில் உள்ள சூழல் கிராமத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த இடமாற்றத்தை ஏற்காத அவருக்கு ஆதரவாக கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் குதித்தனர்.

கடந்த 11-ந்தேதி அலுவலக பணியினை முடித்து கொண்டு நிர்வாக அலுவலர்கள் மாலை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் ஒருநாள் விடுப்பு எடுத்து அவர்கள் மீண்டும் காலை முதல் மாலை வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சப்-கலெக்டர் கவுசிக்குடன் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்தநிலையில் நேற்று காலையில் விடுப்பு எடுத்து 3-வது நாளாக சப்-கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டத்திலுள்ள 145 கிராம நிர்வாக அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

இதனால் அவர்கள் பணியாற்றிவரும் கிராம நிர்வாக அலுவலகங்கள் இரண்டு நாட்களாக செயல்படாமல் மூடப்பட்டுள்ளது. இதனால் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவைகளை பெற முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள். எனவே, போராட்டத்திற்கான தீர்வையோ அல்லது மாற்று ஏற்பாட்டையோ மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்