விஜயகாந்துக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை
இன்று இரவும் விஜயகாந்த் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்தே சிகிச்சை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.;
சென்னை,
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்து சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் தொடர்ந்து ஓய்வு எடுத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு இருமல் மற்றும் சளி தொல்லை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேற்று மாலை சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர், உள்நோயாளி பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெற அறிவுறுத்தினர். அதன்பேரில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், இன்று இரவும் விஜயகாந்த் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்தே சிகிச்சை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிகிச்சை முடிந்த பிறகு அவர் நாளை வீடு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.