விஜயதசமி விழா
விஜயதசமியையொட்டி அரசு பள்ளி-அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
விஜயதசமியன்று கல்வி, கலைகள் என எதைத் தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது நம்பிக்கை. இதையடுத்து பெற்றோர் பலர், தங்கள் குழந்தைகளை விஜயதசமி தினத்தில் பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம். கோவில்களில் 'வித்யாரம்பம்' நடைபெறும். இந்தநிலையில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையத்தில் ஜூன் மாத மாணவர் சேர்க்கையின் போது, மாதக்குறைவு காரணமாக சேர்க்காமல் விடுபட்ட மாணவர்களை விஜயதசமியன்று சேர்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
அங்கன்வாடி மையம்
அதன்படி நேற்று விஜயதசமியன்று தஞ்சை கீழவாசல் கவாடிக்கார தெருவில் உள்ள அங்கன்வாடி மைய பணியாளர் பிரியதர்ஷினி, உதவியாளர் லோகநாயகி ஆகிய 2 பேரும் அந்த பகுதிகளில் வீடு வீடாக சென்று பெற்றோர்களிடம் பேசி, மாணவர்களை அங்கன்வாடி மையத்தில் சேர்த்தனர். மேலும் புதிதாக வந்த மாணவர்களுக்கு சந்தனம், குங்குமம் வைத்து அங்கன்வாடி பணியாளர்கள் வரவேற்றதுடன் சிலேட்டு, குச்சி, நோட்டு, பென்சில், இனிப்புகள் உள்ளிட்டவைகளை வழங்கினர். சேர்க்கப்பட்ட மாணவர்களை அரிசியில் அ, ஆ, என எழுத வைத்தனர்.
அதேபோல் கீழவாசல் பூமால்ராவுத்தர் கோவில் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்ந்த மாணவர்களுக்கு அங்கன்வாடி பணியாளர் ஜெயந்தி சிலேட்டு, குச்சி, நோட்டு, பென்சில், இனிப்புகளை வழங்கினர். மேலும் மாணவர்களுக்கு கிரிடமும் வைத்து அழகு பார்த்தனர். அதேபோல் அரசு தொடக்கப்பள்ளி, தனியார் தொடக்கப்பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று, அரிசியில் அ, ஆ, என எழுத வைத்தனர்.