தர்மபுரி:
தர்மபுரி கேரள சமாஜம் சார்பில் விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் என்கிற புதிதாக பள்ளிக்கு செல்ல இருக்கும் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் விழா தர்மபுரியில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கேரள சமாஜம் தலைவர் கிருஷ்ணன் உண்ணி தலைமை தாங்கினார். செயலாளர் ஹரிக்குமார் வரவேற்று பேசினார். துணைத் தலைவர் நாராயணசாமி, பொருளாளர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கேரள மாநிலம் கண்ணூர் விஷ்ணு நம்பூதிரி மற்றும் குழுவினர் கலந்து கொண்டு கணபதி, லட்சுமி, சரஸ்வதி, பகவதி பூஜை செய்து புதிதாக பள்ளிக்கு செல்ல இருக்கும் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் சடங்குகளை நடத்தினர். பின்னர் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியாக அழைத்து தங்க எழுத்தாணியால் குழந்தைகளின் நாக்கில் எழுதினர். பின்னர் குழந்தைகளின் கையை பிடித்து அரிசியில் எழுத வைத்தனர். இந்த விழாவில் 205 குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் சடங்குகள் நடத்தி வைக்கப்பட்டது. கேரளா சமாஜம் சார்பில் குழந்தைகளுக்கு சிலேட், பென்சில், பல்பம், ரப்பர், புத்தகம் போன்றவை வழங்கப்பட்டன. முடிவில் கேரள சமாஜம் இணை செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.