'வாரிசு' படத்தின் சிறப்பு காட்சி டிக்கெட் கேட்டு விஜய் மக்கள் இயக்க நிர்வாகியின் கார் உடைப்பு
ராமநாதபுரத்தில் 'வாரிசு' படத்தின் சிறப்பு காட்சி டிக்கெட் கேட்டு விஜய் மக்கள் இயக்க நிர்வாகியின் கார் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவரின் காரை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியதால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வருகிற 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.
ராமநாதபுரத்தில் இரண்டு திரையரங்குகளில் 'வாரிசு' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இரண்டு திரையரங்குகளிலும் முதல் மூன்று காட்சிகள் ரசிகர் மன்றத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ரசிகர் காட்சிகளை ராமநாதபுரம் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவராக இருக்கக்கூடிய விவேகானந்தன் தெருவை சேர்ந்த ஜெயபால் என்பவர் எடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் அவர் வீட்டின் அருகில் அவருக்கு சொந்தமான காரை நிறுத்தி வைத்துள்ளார். இதனிடையே முக கவசம் அணிந்து அங்கு வந்த எட்டு மர்ம நபர்கள் காரை சரமாரியாக அடித்து, உடைத்து தரையில் கவிழ்த்து விட்டு, அவரது வீட்டிற்கு சென்று மனைவி உள்ளிட்டவர்களை மிரட்டி சென்றுள்ளனர்.
இதுகுறித்து அவர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தை முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்து தற்போது அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவருக்கு ஆதரவு தரப்பினர் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை போலீசார் யாரையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.