விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தற்கொலை

தாம்பரத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-12-19 21:56 GMT

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம், கடப்பேரி அருகே உள்ள புலிகொரடு பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 27). லாரி டிரைவரான இவர், தாம்பரம் மேற்கு பகுதி 32-வது வார்டு விஜய் மக்கள் இயக்க தலைவராக இருந்து வந்தார். திருமணம் ஆகாத இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது தாய் சின்னமாவிடம் மது போதையில் சண்டை போட்டு விட்டு, தாம்பரம்-திருநீர்மலை சாலையில் அற்புதம் நகர் பகுதியில் தன்னுடன் வேலை செய்யும் சக லாரி டிரைவர்கள் தங்கும் அறையில் தங்கி இருந்தார்.

காதல்

கருப்புசாமி, அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை மது போதையில் இருந்த கருப்புசாமி, தான் காதலித்து வந்த பள்ளி மாணவியுடன் செல்போனில் 'வீடியோ காலில்' பேசினார்.

அப்போது மாணவியின் தாய் வந்துவிட்டதால் மாணவி, செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். சிறிது நேரம் கழித்து மீண்டும் கருப்புசாமிக்கு மாணவி தொடர்பு கொண்டபோது அவர் செல்போனை எடுக்கவில்லை.

நீண்டநேரம் செல்போனில் அழைத்தும் அவர் எடுக்காததால் அதிர்ச்சி அடைந்த மாணவி, இது குறித்து கருப்புசாமியின் தாய் மற்றும் சகோதரியிடம் கூறினார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்புசாமியின் தாய் சின்னம்மா, கருப்புசாமி தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்த போது அங்கு புடவையால் கருப்புசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த தாம்பரம் போலீசார், தூக்கில் தொங்கிய கருப்புசாமி உடலை மீட்டு பிேரத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்புசாமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்