சேலத்தில் விஜயதசமியையொட்டி கோவில்களில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி
சேலத்தில் விஜயதசமியையொட்டி கோவில்களில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
விஜயதசமி விழா
நாடு முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து நவராத்திரி விழாவின் கடைசி நாளான நேற்று விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது.
சரஸ்வதிக்கு உகந்த நாளான இந்த நாளில் முதன் முதலாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எழுத்தறிவு கற்று கொடுத்தால், அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.
அதன்படி நேற்று பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளை அருகில் உள்ள கோவில்கள் மற்றும் பள்ளிகளுக்கு அழைத்து சென்று அங்கு நெல் அல்லது அரிசியை பெரிய தட்டில் பரப்பி குழந்தையின் கை விரலை பிடித்து கொண்டு தமிழ் எழுத்தின் முதல் எழுத்தான அ என்று அதில் எழுத வைத்தனர்.
மேலும் குழந்தைகளின் நாக்கில் தங்க மோதிரத்தால் அ என்று அர்ச்சகர்கள் எழுதினர். இதுதவிர பலர் தங்களது குழந்தைகளை நேற்று பள்ளியில் முதன் முதலாக சேர்த்ததையும் காணமுடிந்தது.
வித்யாரம்பம் நிகழ்ச்சி
சேலம் குரங்குச்சாவடி சாஸ்தா நகரில் உள்ள அய்யப்பா ஆசிரமத்தில் விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இங்கு ஏராளமானோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்தனர். பின்னர் பெற்றோர் அல்லது உறவினர்களின் மடியில் குழந்தைகளை அமர வைத்து, அவர்களின் நாக்கில் அர்ச்சகர்கள் தங்க மோதிரத்தால் தமிழ் எழுத்துக்களை சொல்லி எழுதினர்.
பின்னர் ஒரு தட்டில் பரப்பி வைக்கப்பட்ட அரிசியிலும் அ என்று கை விரலை பிடித்து பெற்றோர்கள் எழுத கற்று கொடுத்தனர். முன்னதாக அதிகாலையில் கோவிலில் மகா கணபதி ஹோமம், அய்யப்ப சாமி மற்றும் பகவதி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து மாலை வரையிலும் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
அதேபோல், சேலம் டவுன் ரெயில் நிலையம் அருகில் உள்ள அய்யப்பா பஜனை மண்டலியிலும் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் விஜயதசமியையொட்டி குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
மாணவர் சேர்க்கை
இதனிடையே சேலத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளிலும் விஜயதசமியையொட்டி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதனால் ஒருசிலர் தங்களது குழந்தைகளை பிரி கே.ஜி.வகுப்பிலும், சிலர் முதலாம் வகுப்பிலும் தங்களது குழந்தைகளை சேர்த்தனர்.