பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம்
திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.;
திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
பவுர்ணமி கிரிவலம்
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.54 மணி அளவில் தொடங்கியது. திருவண்ணாமலையில் நேற்று 105.8 டிகிரி வெயில் பதிவாகியது. இதனால் வெயில் சுட்டெரித்தது. எனினும் பக்தர்கள் பலர் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மாலை வரை கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. ஆனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவிலின் அம்மணி அம்மன் கோபுரம் அருகில் இருந்து ராஜகோபுரம் அருகில் வரை சித்ரா பவுர்ணமியை போன்று இந்த பவுர்ணமிக்கும் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலின் உட்பிரகாரத்திலும் பக்தர்கள் வந்து செல்லும் பாதையிலும் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தண்ணீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது. மேலும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
விடிய, விடிய சென்றனர்
தொடர்ந்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் மாலைக்கு மேல் அதிகரிக்க தொடங்கியது. நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதனால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர்.
திருவண்ணாமலை நகரில் உள்ள முக்கிய இணைப்பு சாலை பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. பவுர்ணமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.34 மணி வரை உள்ளது. இதனால் இன்று காலையிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். போலீசார் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி தொடர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.