ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முதியவர்கள்,விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தமிழக அரசு விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கி வருகிறது. அதன்படி உடுமலை தாலுகாவிற்கு வரவேண்டிய வேட்டி, சேலைகள் தீபாவளிக்கு முன்னதாக வந்து சேரவில்லை. அவை தீபாவளி முடிந்த நிலையில் நேற்று உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தன. மொத்தம் 8 ஆயிரத்து 273 சேலைகள், 500 வெள்ளைநிற சேலைகள், 3ஆயிரத்து 847 வேட்டிகள் ஆகியவை வந்துள்ளன. இவை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் மூலமாக பயனாளிகளுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் உடுமலை தாலுகா சமூக பாதுகாப்புதிட்ட தனிதாசில்தார் எஸ்.ஜலஜா தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.