நாகை மாவட்டத்தை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்

Update: 2022-09-17 18:45 GMT

சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர நாகை மாவட்டத்ைத சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் விண்ணப்பிக்க நாளை (திங்கட்கிழமை) கடைசி நாளாகும்.

இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு விளையாட்டு விடுதி

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் சிறப்பு விளையாட்டு விடுதியானது கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனை படைப்பதற்கான பயிற்சியினை அளித்து வருகிறது. இந்த விடுதியில் மேம்பட்ட விளையாட்டு பயிற்சியுடன், ஊட்டச்சத்து நிறைந்த உணவு, தங்குமிடம் மற்றும் மாணவ- மாணவிகள் பல்வேறு அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு வழிவகை செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது.

அதன்படி சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, வேலூர் மாவட்டம் காட்பாடி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் இந்த சிறப்பு விளையாட்டு விடுதிகளில் 2022-23-ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

சிறந்த விளையாட்டு வீரர்

சிறப்பு விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று, சிறந்த விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் ஆகலாம். இதில் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்று இருத்தல் வேண்டும். மேலும் தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில், தேசிய விளையாட்டு சம்மேளனம், இந்திய விளையாட்டு பள்ளி கூட்டமைப்பு, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஆகியவை நடத்திய போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நாளை கடைசி நாள்

இந்த சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள நாகை மாவட்டத்தை சேர்ந்த வீரர்- வீராங்கனைகள் நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்குள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர்வதற்கு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் அன்றைய தினமே கலந்தாய்வு நடத்தி சேர்க்கைக்கான ஆணை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்