கபாலீசுவரர் கோவிலில் இருந்து ஸ்ரீசைலம் கோவிலுக்கு வஸ்திர மரியாதை - அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இருந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் மல்லிகார்சுனர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.;

Update: 2022-07-12 09:51 GMT

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலிருந்து ஆந்திரபிரதேசம் ஸ்ரீசைலம் மல்லிகார்சுனர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை கொண்டு சென்று வழங்கும் நிகழ்ச்சி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ரீசைலம் மல்லிகார்சுனர் கோவிலில் வஸ்திர மரியாதை செய்துவிட்டு சாமி தரிசனம் முடித்துவிட்டு அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவில்களிலிருந்து பிற மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு வஸ்திரங்கள் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் கோவில் மற்றும் திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவில்களிலிருந்து திருப்பதி ஸ்ரீவெங்கடேசுவரசாமி கோவிலுக்கு வஸ்திரங்கள் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2022-2023-ம் ஆண்டு சட்டசபை மானியக் கோரிக்கையில் இதர மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கும் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்பட தமிழக கோவில்களிலிருந்து இதர மாநிலத் கோவில்களுக்கு வஸ்திர மரியாதை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் இருந்து கேரளா, சபரிமலை சாஸ்தா கோவிலுக்கும், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலிருந்து ஆந்திரா ஸ்ரீசைலம் மல்லிகார்சுனர் கோவிலுக்கும், பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இருந்து கர்நாடகம், மைசூரு சாமுண்டிஸ்வரி அம்மன் கோலிலுக்கும், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்து மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜயினி மகா காளேசுவரர் கோவிலுக்கும், ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இருந்து உத்தரபிரதேசம், காசி விஸ்வநாதர் கோவிலுக்கும், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் இருந்து உத்தரகாண்ட் கேதர்நாத் கோவிலுக்கும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஒடிசா பூரி ஜெகன்னாதர் கோவிலுக்கும், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவிலில் இருந்து குஜராத் சோம்நாத் சோமநாத சாமி கோவில்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் இருந்து, திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கும், திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் இருந்து கர்நாடகம், மங்களூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கும், காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் சாமி கோவிலில் இருந்து கர்நாடகம் மாநிலம் செலுவ நாராயணப் பெருமாள் கோவிலுக்கும், சோளிங்கர் லட்சுமி நரசிம்மசாமி கோவிலில் இருந்து அகோபிலம் நரசிம்மர் கோவிலுக்கும் வஸ்திர மரியாதை வழங்குவது தொடர்பாக கோவில் பழக்க வழக்கத்தினை கருத்தில் கொண்டும் மற்றும் கோவிலில் உள்ள அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களை கலந்தலோசித்தும் சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு சம்மதம் பெற்று விபரம் தெரிவிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதில் முதல்கட்டமாக சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இருந்து ஆந்திரபிரதேசம் ஸ்ரீசைலம் மல்லிகார்சுனர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் இதர மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கும் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் சந்திரமோகன், கூடுதல் கமிஷனர்கள் இரா.கண்ணன் மற்றும் திருமகள், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் இணை கமிஷனர் காவேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்