மேம்பாலங்களுக்கு கீழ் அமைக்கப்பட்டிருக்கும் செங்குத்து தோட்டங்கள் பராமரிப்பின்றி கருகும் அவலநிலை - உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

சென்னையில் மேம்பாலங்களுக்கு கீழ் அமைக்கப்பட்ட செங்குத்து தோட்டங்கள், போதிய பராமரிப்பு இல்லாததால் வாடி, கருகி காட்சி அளிக்கின்றன. இவற்றை மாநகராட்சி சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-10-18 07:32 GMT

சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சாலை போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், 14 உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டு அவை பயன்பாட்டில் உள்ளன. இந்த மேம்பாலங்களின் தூண்களில், போஸ்டர்கள் ஒட்டப்படுவது, சிறுநீர் கழிப்பது என அநாகரிக செயல்கள் தொடர் கதையானது. இதனால், மேம்பாலங்களின் சூழலை, எழில்மிகு தோற்றமாக மாற்ற, சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. 2019-ம் ஆண்டு, அனைத்து மேம்பாலங்களின் தூண்களிலும் ரூ.8 கோடி மதிப்பீட்டில் 'செங்குத்து தோட்டம்' அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.

செங்குத்து தோட்டம் என்பது சிறிய இடங்களுக்கு ஏற்ற, ஓர் சிறிய வகை நகர்ப்புற தோட்ட அமைப்பாகும். இதனால், கார்பன்-டை-ஆக்சைடை கட்டுப்படுத்த முடியும். காற்றின் தரம் மேம்படும். மேலும், மேம்பால சுவர்களை கடும் வெயில்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். இத்தகைய பயன்கள் காரணமாக, சென்னை புரசைவாக்கம் டவுட்டன் மேம்பாலம், சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை மேம்பாலம், ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை மேம்பாலம் உள்பட பல்வேறு மேம்பாலங்களின் தூண்களில் செங்குத்து தோட்டம் அமைக்கப்பட்டன. நகரின் மேம்பாலங்கள் ரம்மியமாக காட்சி அளிக்க தொடங்கின. இந்த வகை தோட்டங்கள், சென்னை பெருநகர மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன. நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளிடம் இருந்து இவற்றை காக்க அதனை சுற்றி சுமார் 5 அடி உயரத்துக்கு வேலிகள் அமைக்கப்பட்டன. சொட்டு நீர் பாசன வசதியுடன் செங்குத்து தோட்டங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், மேம்பாலங்களை ரம்மியமாக மாற்றிய செங்குத்து தோட்டத்தின் தற்போதைய நிலை, காண்போர் மனதை கலங்கடிக்க செய்கிறது.

சென்னை புரசைவாக்கம் டவுட்டன் மேம்பாலத்தில் உருவாக்கப்பட்ட செங்குத்து தோட்ட செடிகள், கொடிகள், மலர்கள் வாடி, கருகி காட்சி அளிக்கின்றன. சொட்டு நீர் பாசனம் முறையாக செயல்படுத்தப்படாததாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் மற்றும் பாதுகாப்பு இல்லாததாலும் இந்த தோட்டம் தற்போது அழியும் நிலையில் உள்ளது. வேலியே பயிரை மேய்ந்தது என கேள்வி பட்டிருப்போம். ஆனால், டவுட்டன் மேம்பாலத்திலோ வேலிக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. செங்குத்து தோட்டத்தை காக்க, மேம்பால தூண்களை சுற்றி அமைக்கப்பட்ட வேலிகள், காணாமல் போய் உள்ளன. ஓரிரு தூண்களில் மட்டுமே வேலிகள் உள்ளன. அதுவும் சிதிலமடைந்து காட்சி அளிக்கிறது.

அதேபோல், சென்னை ராயப்பேட்டை பீட்டர்சாலை மேம்பாலத்தின் துாண்களில் அமைக்கப்பட்ட செங்குத்து தோட்டம் முற்றிலும் அழிந்துவிட்டது. தூண்களில் பொருத்தப்பட்ட பி.வி.சி. தொட்டிகள் கூட தற்போது காணவில்லை. செடிகள் முற்றிலும் இல்லாமல் வெறும் தூண் மட்டுமே காட்சி அளிக்கிறது. அங்கிருந்து, சிறிது தூரத்தில் சத்யம் திரையரங்கம் அருகே மேம்பால தூண்களிலும் செங்குத்து தோட்டச் செடிகள் முற்றிலும் அழிந்துவிட்டன. எழில்மிகு சூழலுக்காக உருவாக்கப்பட்ட பகுதிகள், மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறி உள்ளது. அந்த இடம் முழுவதிலும், மதுபாட்டில்கள் கொட்டிக்கிடக்கின்றன.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:-

சென்னையை சிங்கார சென்னையாக மாற்றும் முயற்சிகளில் அரசு ஈடுபடுகிறது. இதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மாநகராட்சி பூங்காங்கள், சாலைகள், மழைநீர் வடிகால்கள் மேம்படுத்தப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மேம்பாலங்களுக்கு கீழே வாகனத்தில் செல்லும்போதெல்லாம், தூண்களில் உருவாக்கப்பட்ட தோட்டம் கண்களுக்கு இனிமையாக இருக்கும். ஆனால், அவற்றை இப்போது காண முடியவில்லை. அந்த தோட்டம் எல்லாம் இப்போ காய்ந்து, கருகி காட்சி அளிக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் செங்குத்து தோட்டம் மீண்டும் புத்துயிர் பெற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றை வாரத்திற்கு ஒருமுறையாவது பராமரிக்க வேண்டும். தற்போது, எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள செங்குத்து தோட்டங்கள் உள்பட சீராக உள்ள செங்குத்து தோட்டங்கள் அழியாமல் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேம்பாலங்கள் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறுவதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்