மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி

சிவகங்கையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல் நிலை சரிபார்ப்பு பணி மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது.

Update: 2023-07-04 18:45 GMT

சிவகங்கையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல் நிலை சரிபார்ப்பு பணி மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்

வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் முதல் நிலை பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று சிவகங்கையில் நடைபெற்றது. இதையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த தேர்தல் பாதுகாப்பு அறைகள் திறக்கப்பட்டது.

பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்தின் தலைமை பொறியாளர் ரித்து ராஜ் பத்னாசிங் பொறியாளர் விஷப் யூத் ஜிவகர் ஆகியோர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சோதனை செய்தனர். அப்போது கோட்டாட்சியர்கள் பால் துரை, சுகிதா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த மணிமுத்து (தி.மு.க.) சோனி முத்து, சஞ்சய் காந்தி (காங்கிரஸ்) சங்கர சுப்பிரமணியன் (பா.ஜ.க.) தர்மராஜ் (தே.மு.தி.க.) அரசு சோமன், பெரியார் ராமு, (ஆம் ஆத்மி) சசிகுமார் (அ.தி.மு.க.) குஞ்சரம் (சி.பி.ஐ.) மெய்யப்பன் (சி.பி.எம்.) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சரிபார்ப்பு பணி

இதுதொடர்பாக கலெக்டர் ஆஷா அஜீத் கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவைகளில் 1354 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கடந்த தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட 2670 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 1935 கட்டுப்பாட்டு எந்திரம் மற்றும் 2058 வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவி பெட் எந்திரம் ஆகியவை தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன.

இவைகளை 2024-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தலுக்காக முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் பழைய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் முழுமையாக அளிக்கப்பட்டு பின்னர் அவைகள் சரியாக செயல்படுகின்றனவா என சரி பார்க்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்