தூத்துக்குடியில் துணிகரம்:குடோனில் புகுந்து ரூ.4 லட்சம்முந்திரிகொட்டைகள் கொள்ளை

தூத்துக்குடியில் காவலாளியை கட்டிப்போட்டு குடோனில் புகுந்து ரூ.4 லட்சம் முந்திரிகொட்டைகள் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2023-08-07 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடியில் உள்ள ஒரு குடோனில் புகுந்து காவலாளியை தாக்கி அறையில் பூட்டிய மர்மநபர்கள், அங்கிருந்த ரூ.4 லட்சம் முந்திரிகொட்டைகளை கொள்ளையடித்து சென்றனர்.

தனியார் குடோன்

தூத்துக்குடி பால்பாண்டி நகரைச் சேர்ந்தவர் ராஜன். இவருடைய மகன் பால்ராஜ் (வயது 48). இவர் தனது நண்பர்களான எபனேசர், சரவணன் ஆகியோருடன் சேர்ந்து, முந்திரி கொட்டைகளை வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலமாக இறக்குமதி செய்து, அவற்றை பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பி வந்தார்.

இதற்காக தூத்துக்குடி முத்தையாபுரம்- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தனியார் குடோனை வாடகைக்கு எடுத்துள்ளனர். அங்கு மூட்டைகளில் முந்திரி கொட்டைகளை சேமித்து வைத்திருந்தனர்.

காவலாளியை தாக்கி...

இந்த குடோனில் காவலாளியாக முத்தையாபுரத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் குடோனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். நேற்று அதிகாலை 2 மணியளவில் குடோனுக்குள் புகுந்த மர்மநபர்கள் 4 பேர் திடீரென்று பால்ராஜை தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த செல்போனை பறித்தனர். பின்னர் அவரை அங்குள்ள அறைக்குள் தள்ளி பூட்டினர்.

தொடர்ந்து குடோனில் இருந்த சுமார் 50 முந்திரிகொட்டை மூட்டைகளை கொள்ளையடித்து சென்றனர். இவற்றின் மதிப்பு சுமார் 4 லட்சம் ஆகும்.

போலீசார் விசாரணை

நேற்று காலையில் குடோனுக்கு சென்ற ஊழியர்கள், அங்குள்ள அறையில் காவலாளி பால்ராஜ் பூட்டி வைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, அறை கதவை திறந்தனர். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீசார் விரைந்து சென்று, குடோனை பார்வையிட்டனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, முந்திரி கொட்டை மூட்டைகளை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்