பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் வேலூர் மாவட்டத்தில் பாதிப்பு இல்லை

பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் வேலூர் மாவட்டத்தில் எந்தவித பாதிப்பு இல்லை என்று ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-03-17 11:24 GMT

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

பால் கொள்முதல் விலை உயர்வு, கால்நடைகளுக்கு காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு அவர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை உயர்த்தியது. உயர்த்தப்பட்ட தொகை போதுமானதாக இல்லாமல் இருந்தது.

எனவே ஆவின் கொள்முதல் செய்யும் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.42, எருமை பாலுக்கு ரூ.51-ஆக விலை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் முன் வைக்கப்பட்டது. இதனை அரசு ஏற்காததால் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதனால் பால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருகும் என்று கூறப்பட்டது. ஆனால் வேலூர் ஆவினில் வழக்கம்போல நேற்று பால் கொள்முதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறியதாவது:-

பாதிப்பு இல்லை

வேலூர் பால் கூட்டுறவு ஒன்றித்தில் (ஆவின்) ஒருநாளைக்கு சராசரியாக 1 லட்சத்து 15 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும். பேராட்டம் அறிவிப்பு காரணமாக வேலூர் ஆவினில் பால் கொள்முதல் செய்வதில் பிரச்சினை ஏதும் ஏற்படவில்லை. வழக்கம்போல் பால் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் ஆவின் பால் வினியோகத்தில் சிக்கல் ஏற்படவில்லை.

கொள்முதல் செய்யப்பட்ட பால் ஆவினுக்கு கொண்டு வரப்பட்டு பாக்கெட்டுகளாக மாற்றி பொதுமக்களின் தேவைக்கேற்ப தட்டுப்பாடு இன்றி வினியோகிக்கப்படும். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவிப்பு காரணமாக வேலூரில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்