திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் போஷன் அபியான் திட்டத்தின் சார்பில் தகுதி வாய்ந்த புதுமண தம்பதிக்கான பயிலரங்கம் முத்தூர் கடைவீதி, அங்கன்வாடி மையத்தில் நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரா.மோகனாம்பாள் (பொறுப்பு) தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் வேல்முருகன் வரவேற்று பேசினார்.
இதில் முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் பிரசாத், தாமரைகண்ணன், வேல்முருகன், நடமாடும் மருத்துவ குழு டாக்டர் கோபிநாத் தலைமையில் மருத்துவ செவிலியர் குழுவினர் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளுக்கு ஊட்டச்சத்து நிலை மேம்படுத்துதல், கர்ப்ப கால மருத்துவ பராமரிப்பு, குழந்தை பிறப்பு, தாய்ப்பாலின் முக்கியத்துவம், குடும்ப கட்டுப்பாடு நன்மைகள், வாழ்வியல் நலக்கல்வி ஆகிவைகள் பற்றி விளக்கி கூறினார்கள்.
இதில் கலந்துகொண்ட அனைத்து புதுமண தம்பதிகளுக்கும் குடும்ப வாழ்வியல் நெறிமுறை விளக்க கையேடு வழங்கப்பட்டது. விழா நிறைவாக போட்டிகளில் வெற்றி பெற்ற தம்பதிகள் மற்றும் சிறந்த தம்பதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முடிவில் அனைவரும் நலமுடன் வாழ்வோம், வளமுடன் வாழ்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் முத்தூர் நகர, சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த அங்கன்வாடி மைய மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அரசு மருத்துவமனை பணியாளர்கள், புதுமண தம்பதிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அங்கன்வாடி மையம் மேற்பார்வையாளர்கள் அன்னபூரணி, செல்வராணி, லட்சுமி ஆகியோர் நன்றி கூறினார்கள்.