வால்பாறை-சாலக்குடி சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை

ஒற்றை யானை நடமாட்டத்தால், வால்பாறை-சாலக்குடி சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து, கேரள வனத்துறை உத்தரவிட்டது.;

Update: 2022-11-20 18:45 GMT

வால்பாறை

ஒற்றை யானை நடமாட்டத்தால், வால்பாறை-சாலக்குடி சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து, கேரள வனத்துறை உத்தரவிட்டது.

காட்டுயானையால் அச்சம்

கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடிக்கு வனப்பகுதி வழியாக சாலை செல்கிறது. இங்கு மளுக்கப்பாறை அருகே கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டுயானை உலா வருகிறது. இந்த யானை, அந்த வழியாக செல்லும் வாகனங்களை துரத்துகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

சமீபத்தில் சாலக்குடியில் இருந்து வால்பாறை நோக்கி வந்த கேரள அரசு பஸ்சை அந்த யானை துரத்தியது. இதனால் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு பஸ்சை டிரைவர் பின்னோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

வனத்துறை தடை

அந்த சாலையில் பஸ்கள் மட்டுமின்றி பிற வாகனங்களும் அதிகளவில் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சுற்றுலா வாகனங்கள் ஏராளமான சென்று வருகின்றன. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி நேற்று முதல் ஒரு வாரத்துக்கு கேரள அரசு போக்குவரத்துக்கழக பஸ் தவிர சுற்றுலா வாகனங்கள் உள்பட பிற வாகனங்கள் செல்ல கேரள வனத்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் வனத்துறையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்