பள்ளி குழந்தைகளுக்கான வாகனங்களை கவனத்துடன் கையாள வேண்டும்

பள்ளி குழந்தைகளுக்கான வாகனங்களை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டுமென கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.;

Update: 2023-07-21 19:16 GMT


பள்ளி குழந்தைகளுக்கான வாகனங்களை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டுமென கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

கருத்தரங்கம்

விருதுநகர் கலெக்டர்அலுவலக கூட்ட அரங்கில் போக்குவரத்து துறை சார்பில் அனைத்து தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் முதல்வர்கள், வாகன பராமரிப்பவர்களுக்கு பள்ளி வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டதாவது:- அமைதி காலத்தில் சிந்துகின்ற வியர்வை யுத்த காலத்தில் சிந்தக்கூடிய ரத்தத்தின் அளவை குறைக்கும் என்று ராணுவத்தில் மேற்கோள் காட்டுவது போல ஆபத்து வருவதை தடுப்பதற்கு நிறைய பயிற்சிகள் அவசியம். கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரம் ஆகும். அதில் 90 சதவீதம் பேர் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர். மீதமுள்ள 10 சதவீதம் பேர் குழந்தைகள் ஆவார்கள்.

சாலை விபத்து

18 வயதுக்கு மேற்பட்டவர்களால் சாலை பாதுகாப்பு விதிமீறல்கள் மூலம் ஏற்படும் சாலை விபத்துகளுக்கு அவர்களே பொறுப்பாவார்கள். ஆனால் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் சாலை விபத்துகளுக்கு அவர்களை அழைத்துச் செல்லக் கூடியவர்கள், வாகனத்தில் உள்ள பாதுகாவலர்கள், வாகன ஓட்டுனர்கள், பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவருமே பொறுப்பாளர்கள் ஆவர்.

எந்த ஒரு விபத்தும் பெரும்பாலும் தவிர்க்கப்பட கூடியதாக தான் இருக்கிறது.

விபத்தில்லா பயணம்

எனவே அனைவரும் மிகுந்த கவனத்துடன், சிரத்தையுடன் பள்ளி குழந்தைகளுக்கான வாகனங்களை கையாள வேண்டும். எனவே இந்த கருத்தரங்கின் நோக்கத்தை அனைவரும் புரிந்துகொண்டு விபத்தில்லா பயணம் என்ற குறிக்கோளோடு செயல்பட வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இக்கருத்தரங்கில் விருதுநகர் துணை போக்குவரத்து ஆணையர் சுப்பிரமணியம், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயராஜ், பிரபாகர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பாஸ்கரன், குமாரவேல், போக்குவரத்து கழக அலுவலர்கள், அனைத்து தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் செயலர்கள், முதல்வர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்