சட்டவிரோதமாக கழிவுகள் ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்-துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

“தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கழிவுகள் ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்” என்று துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2022-12-17 18:45 GMT

"தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கழிவுகள் ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்" என்று துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழிப்புணர்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சரக்கு வாகனங்களில் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படுத்தும் மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், சாயக்கழிவுகள், கோழிக்கழிவுகள், மீன்கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் ஏற்றி வருவதை தடுக்கும் விதமாக லாரி உரிமையாளர்கள் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த கூட்டத்தில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமை தாங்கி பேசினார்.

வாகனங்கள் பறிமுதல்

அப்போது அவர் கூறியதாவது:-

அண்டை மாநிலங்களில் இருந்து மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், கோழி கழிவுகள், மீன் கழிவுகள் போன்றவற்றை வாகனங்களில் ஏற்றி வந்து தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதிக்கப்படாத பொது இடங்களிலோ, தனியாருக்கு சொந்தமான இடங்களிலோ கொட்டவோ, குழி தோண்டி புதைக்கவோ கூடாது. அவ்வாறு சட்டவிரோதமாக கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

மேலும் அந்த கழிவுகள் ஏற்றி வரும் வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு அனைத்து வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள், நடத்துனர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் லாரி புக்கிங் ஏஜென்ட் அசோசியேஷன், லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர்கள் கெங்கநாத பாண்டியன், முருகப்பெருமாள், ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்