ஆதிவாசி மாணவர்கள் பள்ளி செல்ல வாகன வசதி

முதுமலையில் இருந்து மசினகுடியில் உள்ள பள்ளிக்கு சென்று படித்து வரும் ஆதிவாசி மாணவர்களுக்கு வனத்துறை சார்பில் வாகன வசதி செய்யப்பட்டு உள்ளது.;

Update:2023-10-20 02:15 IST

முதுமலையில் இருந்து மசினகுடியில் உள்ள பள்ளிக்கு சென்று படித்து வரும் ஆதிவாசி மாணவர்களுக்கு வனத்துறை சார்பில் வாகன வசதி செய்யப்பட்டு உள்ளது.

பள்ளி செல்வதில் சிரமம்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் தெப்பக்காடு, கார்குடி பகுதிகளில் ஆதிவாசி மக்கள் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். வனத்துறையினர் மற்றும் ஆதிவாசி மக்களின் குழந்தைகள் கூடலூர் அல்லது மசினகுடி அரசு பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர்.

ஆனால், கூடலூரில் இருந்து மசினகுடிக்கு செல்லும் வழித்தடத்தில் போதிய பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். எனவே, பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளின் நலன் கருதி வாகன வசதி செய்து தர வேண்டும் என ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

வாகன வசதி

இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில், தெப்பக்காடு சூழல் மேம்பாட்டு குழு சார்பில், ஆதிவாசி மாணவர்கள் முதுமலை தெப்பக்காட்டில் இருந்து மசினகுடியில் உள்ள பள்ளிக்கு செல்ல வாகன வசதி செய்யப்பட்டு உள்ளது. துணை இயக்குனர் வித்யா கொடியசைத்து ஆதிவாசி மக்களின் குழந்தைகளை வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். இதனால் ஆதிவாசி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நிகழ்ச்சியில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, வனச்சரகர்கள், ஆதிவாசி மக்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ஏற்கனவே தெப்பக்காட்டில் இருந்து கார்குடி, கூடலூர், மசினகுடி, வாழைத்தோட்டம் மற்றும் சிறியூர் இடையே வனத்துறை சார்பில் ஆதிவாசி மக்களின் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கு காலை, மாலை வேளையில் வாகனம் இயக்கப்படுகிறது என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்