தஞ்சையில், காய்கறி விலை கடும் உயர்வு
பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக அதிக அளவில் வாங்குவதாலும், விளைச்சல் குறைவு காரணமாகவும் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.;
பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக அதிக அளவில் வாங்குவதாலும், விளைச்சல் குறைவு காரணமாகவும் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காமராஜர் மார்க்கெட்
தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
இங்குள்ள மொத்த வியாபாரிகளிடம் இருந்து சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிக்கொண்டு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், மன்னார்குடி உள்ளிட்ட இடங்களுக்கும் விற்பனைக்காக எடுத்துச்செல்வது வழக்கம். தஞ்சை மார்க்கெட்டிற்கு கரூர், தூத்துக்குடி, தேனி, பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, நிலக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படும்.
விலை அதிகரிப்பு
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்காக புதுமணத்தம்பதியினருக்கும் மற்றும் திருமணமான பெண்களுக்கு பெற்றோர்கள், சகோததர்கள் சீர்வரிசை கொடுப்பது வழக்கம். இதில் கரும்பு, வாழைத்தார், பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவையும் அடங்கும்.
இதனால் தற்போது காய்கறிகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது பனி காரணமாக காய்கறிகள் விளைச்சலும் குறைவாக உள்ளது. இதனால் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் முருங்கைக்காய் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ முருங்கைக்காய் நேற்று ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வரத்து குறைந்தது
இதே போல் கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய் பீட்ரூட், சின்னவெங்காயம் ஆகியவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. விளைச்சல் குறைவாக இருந்ததால் தஞ்சை மார்க்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்தும் குறைவாக இருந்தது.
விலை விவரம்
தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோகணக்கில்) வருமாறு:-
கத்தரிக்காய் ரூ.40 முதல் ரூ.80 வரை. வெண்டைக்காய் ரூ.60, பீன்ஸ் ரூ.40, அவரைக்காய் ரூ.50, கேரட் ரூ.40, வெள்ளரிக்காய் ரூ.30, குடைமிளகாய் ரூ.70, கோவக்காய் ரூ.40, பீட்ரூட் ரூ.45, பச்சை மிளகாய் ரூ.40, முட்டைக்கோஸ் ரூ.15, காலிபிளவர் ரூ.40, பாகற்காய் ரூ.50, இஞ்சி ரூ.40, சின்ன வெங்காயம் ரூ.70 முதல் ரூ.100 வரை. பல்லாரி ரூ.20 முதல் ரூ.30 வரை. உருளைக்க்கிழங்கு ரூ.30, பரங்கிக்காய் ரூ.20, தக்காளி ரூ.25, முருங்கைக்காய் ரூ.120.
இது குறித்து காய்கறி வியாபாரிகள் கூறியதாவது:-
தஞ்சை காமராஜர் மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் குறைந்த அளவே விற்பனைக்கு வருகின்றன. இதனால் தற்போது காய்கறிகளின் விலை அதிகமாக காணப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு பின்னர் விலை குறைவதற்காக வாய்ப்புகள் உள்ளன. தக்காளி விளைச்சல் குறைவாக இருப்பதால் கிலோவுக்கு ரூ.15 வரை அதிகரித்துள்ளது.
விற்பனை இல்லை
வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே காய்கறிகளின் விற்பனை அதிக அளவில் நடைபெறும். ஆனால் தற்போது பொங்கல் பண்டிகைக்கு ஒரிரு நாட்களே உள்ள நிலையில் காய்கறிகளின் விற்பனை சுமாராகத்தான் உள்ளது. தற்காலிக காமராஜர் மார்க்கெட்டில் இருந்த விற்பனை கூட, புதிதாக தொடங்கப்பட்ட காமராஜர் மார்க்கெட்டில் விற்பனை இல்லை"என்றனர்.